உத்தரப் பிரதேசம், உத்தரக்காண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு நவம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்விரு மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளிலும் பாஜக அசுர பலத்தில் உள்ளதால் பல இடங்களில் பாஜக வெற்றிபெறவுள்ளது. இதனால், கூட்டணி கட்சிகள் ஆதரிக்கும் பட்சத்தில் பாஜக பெரும்பான்மையை நோக்கி செல்லவுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் சந்திரபால் சிங் யாதவ், ஜாவத் அலி, ரவி பிரகாஷ் வர்மா, ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் வீர் சிங், ராஜாராம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ் பாபர், பி.எல். பூனியா, பாஜகவின் நீரஜ் சேகர், ஹர்தீப் சிங் பூரி, அருண் சிங் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இதில், ராஜ் பாபர் மட்டும் உத்தரக்காண்டில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபட்டவர் ஆவார்.
உத்தர பிரதேச சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி, சமாஜ்வாதி கட்சி மட்டும் ஒரு இடத்தில் வெற்றபெற வாய்ப்புள்ளது. அந்த இடத்திற்கு, ராம் கோபால் யாதவையே அக்கட்சி நிறுத்தியுள்ளது. பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் பட்சத்தில், மற்றொரு இடத்தில் எதிர்க்கட்சி வெற்றிப் பெறவாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு சிறிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.