ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. பாஜக 70 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில், அக்கட்சி 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் சுயேட்சைகள் எட்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தனர். தேசிய லோக் தள் ஒரு தொகுதியை கைப்பற்றியது.
ஹரியானாவில் பாஜக ஆட்சி உறுதி!
டெல்லி: ஜனநாயக் ஜனதா, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி இறுதியானதைத் தொடர்ந்து, பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
சுயேச்சைகளின் உதவியோடு பாஜக ஆட்சி அமைக்கும் எனச் செய்திகள் வெளியாகின. இதனிடையே, மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூரின் வீட்டிற்கு ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா சென்றிருந்தார். பின்னர், இருவரும் உள் துறை அமைச்சர் அமித் ஷா வீட்டிற்குச் சென்றனர். இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது.
முதலமைச்சர் பதவி பாஜகவைச் சேர்ந்தவருக்கும் துணை முதலமைச்சர் பதவி ஜனநாயக் ஜனதா கட்சியைச் சேர்ந்தவருக்கும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாளை ஹரியானா மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோர உள்ளதாக அம்மாநில காபந்து முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.