கடந்த சில நாள்களாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவிவந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாட்டில் சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வலியுறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இச்சூழலில், நேற்று மத்திய அரசு டிக்டாக், ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளைத் தடைசெய்வதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்துவந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய பாஜக அரசு தொடர்ந்து அதிகளவு சீனாவிடமிருந்து பொருள்களை இறக்குமதி செய்துவருகிறது என்பதைப் புள்ளிவிவர வரைபடத்துடன் வெளியிட்டுள்ளார்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் (2008-2014), 13 விழுக்காட்டிற்கும் குறைவாக சீனாவிடமிருந்து பொருள்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், அதுவே பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியமைத்த (2014-2020) பிறகு 18 விழுக்காட்டிற்கும் அதிகளவு உயர்ந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வரைபடத்துடன் அவர் தரவுகள் எப்போதும் பொய் சொல்வதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். பாஜக மேக் இன் இந்தியா என்பதை நாடு முழுவதும் அறிவித்துவிட்டு, சீனாவிடமிருந்து ஏராளமான பொருள்களை இறக்குமதி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.