நடப்பாண்டு இறுதியில் பிகார் மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெறும் ஐக்கிய ஜனதாதள - பாஜக கூட்டணி அரசின் ஆட்சிக் காலம் நிறைவுபெறவுள்ள நிலையில், அங்குள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் - நவம்பர் காலகட்டத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, பிகார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைந்து போட்டியிட்டு, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும். தேர்தல் தொகுதிப் பங்கீட்டு, வேட்பாளர் ஆகியவற்றின் இறுதி முடிவை பாஜக நாடாளுமன்ற குழு மேற்கொள்ளும். ஐக்கிய ஜனதாதளமும் பாஜகவும் சம எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம்” எனத் தெரிவித்தார்.
தற்போது பிகார் முதலமைச்சராக ஐக்கிய ஜனதாதளக் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் உள்ளார், துணை முதலமைச்சராக பாஜகவின் சுஷில் மோடி பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஈரானுக்கு திடீர் பயணம் மேற்கொள்ளும் ராஜ்நாத் சிங்