காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பக நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்.
இந்நிறுவனம், வட்டியில்லாமல் 90.25 கோடி ரூபாய் கடனை காங்கிரஸ் கட்சியிடம் வாங்கியதாகவும் அதனை திருப்பி செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த 2010ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து பங்குகளை வாங்கியதாகவும் இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய பல்வேறு ஆதாரங்களை சமர்பிக்கவும் சாட்சியங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரியும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற பதிவு அலுவலர் சங்சீவ் கல்கோனார், நிலம் மற்றும் வளர்ச்சித்துறை துணை அலுவலர் ரஜ்னீஷ் குமார் ஜா, வருமான வரித்துறையின் துணை ஆணையர் சாகேத் சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், "இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை தலைமை விசாரணை அலுவலரிடம் சமர்பித்துள்ளோம். அவை அனைத்தும் கசியவிடப்பட்ட அரசு ஆவணங்களின் நகல்கள் ஆகும். எனவே, சம்பந்தப்பட்ட சாட்சியங்களிடம் இந்த ஆவணங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.