ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் தொகுதி எம்.பி. அபராஜிதா சாரங்கி வியாழக்கிழமை (ஜூன்4) கூட்டமொன்றில் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் பெண் எம்.பி. அபராஜிதா முகக்கவசம் அணியவில்லை. மேலும், தகுந்த இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது. மேலும் காவல்துறை மற்றும் மாநகராட்சி ஆணையருக்கும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக எம்.பி.க்கு அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக பெண் எம்.பி. தவிர மேலும் 20 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ட்வீட் செய்துள்ள காவல்துறை ஆணையர், “மக்கள் சுய ஒழுக்கத்தையும், விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அபராஜிதா, “ மக்களின் மீதான அக்கறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 விதிமுறைகளை நான் மதிக்கிறேன். இது ஒரு நல்ல அறிகுறி. நான் எனது கடமையை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், கூட்டத்தில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காத அபராஜிதா மீது காவல் நிலையத்திலும் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: “நாராயணசாமிக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்”- கொதிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.!