பிக் பாஸ் நிகழ்ச்சி 2006ஆம் ஆண்டு இந்தியில் தான், நாட்டிலேயே முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியில் பிக் பாஸ் சீசன் 13 நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில், பெரும்பாலும் தங்களது டிஆர்பி ரேட்டிங்கிற்காக, இது போன்ற சர்ச்சையை உருவாக்குவது வழக்கம். இந்த சீசனில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் பரீட்சயமான பிரபலங்கள் பலரும், இதில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளானர்.
இந்நிலையில் பிக் பாஸ் 13 நிகழ்ச்சி ப்ரைம் டைமில் ஆபாச காட்சிகள் கொண்டு ஒளிபரப்பப்படுவதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு உடனடியாக தடை விதிக்க வலியுறுத்தியும் உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'பிக் பாஸ் நிகழ்ச்சி கலாசார கேடு விளைவிக்கிறது. குடும்பத்தினரோடு பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இந்த மாதிரியான ஆபாசக் காட்சிகள் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நெருக்கமான படுக்கைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் வேறுபட்ட சமூகம், மதத்தைச் சார்ந்தவர்கள் படுக்கையைப் பகிர்ந்துக் கொண்டு இந்திய கலாசாரத்தை இழிவுப்படுத்துகிறார்கள். எனவே, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.