எந்த தொழில்நுட்பத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடித்ததோ, அதுவே அக்கட்சியின் தலைவலியாக தற்போது மாறியுள்ளது. இந்தியாவின் தென்னகமான தமிழகத்தில் பற்ற வைக்கப்பட்ட மோடிக்கு எதிரான டிவிட்டர் பரப்புரை, வட இந்தியா வரை பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
செல்லும் இடமெல்லாம் பாஜகவையும், மோடியையும்- எதிர்க்கட்சியினர், வேலையில்லா பட்டதாரிகள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளிலேயே, பாஜக அரசை கடுமையாக விமர்சிப்பது போன்ற டிவிட்டுகள் நேற்று வந்து விழுந்தன.
அதை முழுமையாக படிக்காமலே, பாஜகவின் ‘பக்தர்களும்’ ஹார்டின் விடுவதும், ரீ-டிவிட் செய்வதுமாக குஷியாக இருந்து வந்தனர். அதன் உச்சக்கட்டமாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் டிவிட்டரில், 'நடுத்தர மக்களுக்காக உழைப்பதென்பது மோடி அரசின் முன்னுரிமையே கிடையாது' என்பது போன்ற அர்த்தங்களுடன் டிவிட்டுகள் பறந்தன.
ஆரம்பத்தில், பொன்.ராதாகிருஷ்ணனின் டிவிட்டர் பக்கம் ஹேக் ஆகியிருக்கலாம் என நெட்டிசன்கள் யூகித்த நிலையில், இது தொடர்பான அதிர்ச்சிகர பின்னணி தகவல்களை ஆல்ட் நியூஸ்(AltNews) என்னும், போலி செய்திகள் கண்டறியும் இணையதளத்தின் நிறுவனர் பிரதிக் சின்ஹா வெளியிட்டுள்ளார்.
பாஜக முக்கிய பிரமுகர்களின் ஐ.டி. அணிகள் உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்கள் பலருக்கும், கூகுள் டிரைவ் சேவை மூலமாக, அந்த சமயத்தில் டிவிட்டரில் என்ன டிரெண்டாகிறது? என்ன டிவிட் செய்ய வேண்டும்? உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய டாக்குமென்டை பாஜக ஐ.டி. விங் பரப்புகிறது. பாஜகவினரும் அந்த டாக்குமென்டுகளில் என்ன இருக்கிறது என்பதையெல்லாம் படிக்காமல், அப்படியே டிவிட்டுகின்றனர் என்கிறார் பிரதிக் சின்ஹா.
உதாரணமாக, நண்பன் திரைப்படத்தில், சில எழுத்துகளை அதன் அர்த்தம் தெரியாமலே வாசிப்பார் அல்லவா சத்யன், ஏறக்குறைய அதே கதை தான். அதாவது, 'with dignity' (கண்ணியத்துடன்) என்பதற்கு பதிலாக 'without dignity' (கண்ணியமற்ற) என முழு அர்த்தத்தையும் மாற்றிவிடும் சிறு டிவிஸ்டுகளை புரிந்து கொள்ளாமல், பாஜகவினர் அதை பதிவிட்டு விடுகின்றனர்.
என்னதான் பாஜவின் ஐ.டி. விங் நிலைமை பாப்பம்பட்டி அணியினர் போல் பரிதாபமாக இருந்தாலும், ஒரு தேசிய ஆளுங்கட்சியின் ஐ.டி. விங் நிலை இப்படியா இருப்பது என அக்கட்சியின் முரட்டு ஆதரவாளர்களே ஆதங்கப்படுகின்றனர். அதேபோல், இனியாவது ‘மண்ட மேல இருக்க கொண்டைய’ மறைக்க பாஜக முயற்சிக்கட்டும் என நெட்டிசன்களும் வாழ்த்தி வருகின்றனர்.