தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவில் இணைந்த சில மணி நேரத்திலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சை நபர் - போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்திய கபில் குர்ஜர்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், இன்று பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களிலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கபில் குர்ஜர்
கபில் குர்ஜர்

By

Published : Dec 30, 2020, 8:12 PM IST

டெல்லி:இன்று பாஜகவில் சேர்ந்த கபில் குர்ஜர், கட்சியில் சேர்ந்த சில மணி நேரங்களிலேயே அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கபில் குர்ஜர் துப்பாக்கியால் இருமுறை சுட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்ட பாஜக தலைவர் முன்னிலையில், கபில் குர்ஜர் இன்று அக்கட்சியில் இணைந்தார். அப்போது பேசிய அவர், ”பாஜக இந்துத்துவத்தை வலுப்படுத்த உழைத்து வருகிறது. பாஜகவால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் இந்துக்களுக்கானது. நானும் இந்துத்துவத்திற்காக சேவை செய்ய விரும்புகிறேன். இந்துத்துவத்திற்கு பெரிய அளவில் எனது பங்கினை செய்து, நாட்டிற்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதற்காகவே இன்று பாஜகவில் இணைந்துள்ளேன்" என்றார்.

கபில் குர்ஜர் பாஜகவில் இணைந்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்கி அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக காசியாபாத் மாவட்ட பாஜக தலைவர் சஞ்சீன் சர்மா கூறுகையில், ”இன்று பாஜகவில் இணைந்த கபில் குர்ஜர் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டராவார். ஷாகின் பாக் நிகழ்ந்த சம்பவத்துடன் அவருக்கு தொடர்பு இருப்பது குறித்து எங்களுக்கு தெரியாது" என்றார்.

முன்னதாக ஷாகின் பாக் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் கைது செய்யப்பட்ட கபில் குர்ஜருக்கு, டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எஸ்டோனியா உள்ளிட்ட மூன்று நாடுகளில் இந்திய தூதரகம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details