இது குறித்து தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் லக்ஷ்மணன் பேசுகையில், 'தெலங்கானா அரசு இன்டர்மீடியேட் மாணவர்கள் பிரச்னையை தீர்ப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. கடந்த 10 தினங்களில் இன்டர்மீடியேட் மாணவர்கள் போராட்டம் தொடங்கிய தினத்திலிருந்து பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இது குறித்து நாங்கள் தெலங்கானா ஆளுநரை அணுகினோம்.
மேலும், நாங்கள் கல்வித் துறை அமைச்சர் குண்டகண்டிலா ஜகதீஷ் ரெட்டியை இடைநீக்கம் செய்ய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். மேலும், மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடருவோம்' என தெரிவித்தார்.
தெலங்கானாவில் இன்டர்மீடியேட் தேர்வு எழுதிய மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். மாணவர்கள்-பெற்றோர், 'தேர்வு முறையில் பெரிய அளவில் முரண்பாடுகள் உள்ளது. இன்டர்மீடியேட் தேர்வின் அனைத்து விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவும், தேர்வில் தவறான முடிவுகளை வெளியிட்டதற்காக தெலங்கானா மாநில இடைநிலைக் கல்வி வாரியத்தின் செயலர் ஏ.அசோக்கை இடைநீக்கம் செய்ய வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளனர்.