கரோனா, என்கவுன்ட்டர் சம்பவங்கள், அதிகரித்துவரும் குற்ற வழக்குகள் என பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி யோகி தலைமையிலான உத்தரப் பிரதேச அரசை விமர்சித்துவருகிறார். இதனிடையே, காசியாபாத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது என பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது உறவினர் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் சொந்த மகள் முன் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்தவர்களுக்கு எதிராகப் புகார் தெரிவித்த, பொதுமக்கள் அச்சத்தில் இருக்கிறனர். அந்த அளவுக்கு, உத்தரப் பிரதேசத்தில் ரவுடிகளின் அதிகாரம் அதிகரித்துள்ளது. முன்பிருந்த அரசுகள் போல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.