இந்திய அரசின் சார்பில் ட்ரம்புக்கு வழங்கும் விருந்து நிகழ்வில் பங்கேற்க மத்திய அரசின் சார்பில், நான்கு நாட்களுக்கு முன்பு மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான மன்மோகன் சிங், தற்போது அவரது உடல்நிலையைச் சுட்டிக்காட்டி விருந்திலிருந்து விலகியுள்ளார்.
ட்ரம்பிற்கு அளிக்கப்படும் விருந்து நிகழ்வில் பங்கேற்க முடியாததற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது வருத்தங்களை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மாளிகைக்குத் தகவல் தெரிவித்தார். இந்திய அரசின் மரபின்படி, வெளிநாட்டிலிருந்து அரசுமுறை பயணம் வரும் தலைவர்கள், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை இந்தியாவுக்கு வருகைப் புரிந்துள்ள அதிபர் டிரம்பிற்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் எந்தவொரு சந்திப்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதுபோன்ற வெளிநாட்டு வருகைகளின் போது, பாரம்பரியமாக இருந்த மரபை காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டு, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும், இந்தியக் குடியரசின் மாளிகையின் (ராஷ்டிரபதி பவன்) நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என தெரியவந்திருக்கிறது.