இந்திய அளவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தாலும் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் அதன் நிலைமை தலைகீழாக இருக்கிறது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்ற தொகுதிகளையும் இந்தத் தேர்தலில் பாஜக பறிகொடுத்து பரிதாபமாக இருக்கிறது என அக்கட்சித் தொண்டர்கள் வேதனை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று ஆந்திரா சென்றார். அவரை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்றார். அதன்பிறகு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த அவர் ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ”ஆந்திரா, தமிழ்நாடு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்காவிட்டாலும் மற்ற மாநிலங்களைப் போல் இந்த மாநில மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை மத்திய அரசு உறுதி செய்யும். விரைவில் ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் பாஜகவின் கொடி உயரப் பறக்கும்” என்றார்.
இதனையடுத்து பிரதமரின் பேச்சு குறித்து தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், ஆந்திராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டை குறிப்பிட்டதற்கு மோடிக்கு நன்றி. தமிழ்நாட்டில் தாமரையை மலரச் செய்வதற்கு உங்கள் பேச்சு பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.