நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சித்தலைவர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
மேலும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தேர்தல் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி தனது தேர்தல் பரப்புரையை பிரயாக்ராஜ் நகரில் நேற்று தொடங்கினார்.
இதற்காக பிரியங்கா காந்தி பிரயாக்ராஜ் நகரின் சத்நாத் பகுதியில் உள்ள கங்கையிலிருந்து வாரணாசி வழியாக அஸி காட் வரை 140 கி.மீ. படகில் பயணம் மேற்கொள்கிறார். மூன்று நாட்கள் மேற்கொள்ளும் இந்த பயணத்தின் வழியே மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்கிறார்.
இந்நிலையில் பிரியங்கா மேற்கொள்ளும் படகு யாத்திரை ஒரு சுற்றுலா போன்றது என உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "அந்த காலத்தில் சில குடும்பங்களை ராஜ்கரனா என்றழைப்பார்கள். அவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, அதாவது தேர்தல் சமயங்களில் சுற்றுலா மேற்கொள்வர்.
இந்த படகு யாத்திரையும் வாக்குக்காக என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. தீய எண்ணங்களை காங்கிரஸ் கொண்டுள்ளதால்தான், பகுஜன்-சமாஜ்வாடி கூட்டணி காங்கிரஸ் தேவையில்லை எனக் கூறியுள்ளது. இது படகு யாத்திரை அல்ல, வாக்கு யாத்திரை" என உணர்ச்சிவசப்பட பேசினார்.