புவனேஸ்வர்:ஒடிசா மாநிலம் நாயகர் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியைக் கொலைசெய்த வழக்கில் பிரதான குற்றவாளியைக் காப்பாற்றியதாக பிஜு ஜனதா தள கட்சியின் அமைச்சர் அருண்குமார் சாஹு மீது பாஜக மகளிர் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவரை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட பாஜக மகளிர் அணியினர், சிபிஐ விசாரணை குறித்து பிஜு ஜனதா தள அரசு ஏன் அச்சம் கொள்கிறது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும்வரை ஓய்வதாக இல்லை எனவும் தெரிவித்தனர்.
ஒடிசா அரசாங்கம், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அமைச்சரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதே சமயத்தில், ஒடிசா காங்கிரஸ் பொறுப்பாளர் செல்ல குமார், குற்றங்களை நிரூபிக்க ஒடிசா உயர் நீதிமன்றம் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு சிபிஐ விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை. எனவே நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் விசாரணைக் குழு அமைக்கப்படவேண்டும் என்றார்.