நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியின் நிறுவனர் சட்டவிரோத பரிவர்த்தனைச் சட்டத்தில் அமலாக்கத் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவர் பல்வேறு அரசியல் பிரமுகர்களிடமிருந்து அதிக விலை மதிப்பிலான ஓவியங்கள் வாங்கியுள்ளதாகவும், அதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் ஓவியமும் ஒன்று என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சர்ச்சை குறித்து பாஜகவின் தகவல்தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாலவியா தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாட்டின் முக்கிய ஊழல் புகார் அனைத்திலும் இந்திரா காந்தி குடும்பத்தினருக்குத் தொடர்பு இருக்கும். விஜய் மல்லையா, சோனியா காந்தி, மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோரிடம் தொடர்பில் இருந்துள்ளார்.
மற்றொரு ஊழல்வாதி நிரவ் மோடியுடன் ராகுல் காந்தி தொடர்பில் இருந்துள்ளார். தற்போது யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் பிரியங்கா காந்தியின் ஓவியங்களை வாங்கியுள்ளார்' எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.