இந்திய அரசியலைப்புச் சட்டம் ஆறாவது அட்டவணையின்படி வடகிழக்கு மாநிலங்களுக்கு சில சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆறாவது அட்டவணையில் வழங்கப்பட்ட அதிகாரங்கள்:
- நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு செல்ல மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐ.எல்.பி. (Inner Line Permit) என்ற ஆவணம் வைத்திருக்க வேண்டும்.
- திரிபுரா, அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்களில் பழங்குடியினர் பெரும்பாலாக வாழும் மாவட்டங்களில் சுயாட்சி அமைப்பு உள்ளது. பூர்வகுடி மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இவற்றுக்கு பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் மேலே குறிப்பிட்ட அதிகாரங்கள் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவிவருகிறது. எனவே, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக வடகிழக்கு மாணவர் அமைப்பு கடையடைப்புப் போராட்டம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அம்மாநில துணை முதலமைச்சர் பிரஸ்டோன் சின்சாங், "இந்த மசோதாவிலிருந்து மேகாலயாவுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளோம். ஆறாவது அட்டவணைக்கு இணங்காத பகுதிகளில் இந்த மசோதா பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாங்கள் பாதிப்படைவோம். மாநிலத்தில் 96 விழுக்காடு பகுதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுமானால் மற்ற 4 விழுக்காடு பகுதிகளுக்கும் விதிவிலக்கு அளிக்கலாம்" என்றார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை மேகாலயா முதலமைச்சர் சங்மா, உள் துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அளித்தது குறிப்பிடத்தக்கது.