288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எஞ்சிய தொகுதிகளைக் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு வழங்குவது என்று ஏற்கனவே முடிவெடுத்துவிட்டன.
ஆனால், ஆளும் பாஜக தரப்போ கூட்டணி விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் காய் நகர்த்திவருகிறது. இதனால், கூட்டணி முடிவை அறிவிப்பதில் இரு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடிக்கிறது.