கேரள மாநில அரசால் வீடில்லாத ஏழைகளுக்கு வீடுகட்டித் தரும் லைஃப் மிஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கேரள எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேரள மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன், "லைஃப் மிஷன் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பான விசாரணை விரைவில் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகளான வீணாவை ஏட்டும்.
அந்தத் திட்டத்தில் நடைபெற்ற மோசடியில் அவருக்கும் பங்குள்ளதாகவே எனக்குத் தெரிந்த மிக முக்கிய அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான முறையான விசாரணை நடைபெற வேண்டுமெனில் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகி, வழக்கின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.
லைஃப் மிஷனின் இந்த குறிப்பிட்ட வீடு கட்டித்தரும் திட்டத்தை மேலாண்மை செய்தவர் தங்கக் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் என்பது கவனிக்கத்தக்கது.
மாநில தொழிற்துறை அமைச்சர் ஈ.பி. ஜெயராஜனின் மகனுக்கும் இந்தத் திட்டத்தில் ஒரு பெரிய தொகை லஞ்சமாக கைமாறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
கேரள அரசின் இந்த லைஃப் மிஷன் திட்டத்தில் இதுவரை 2,26,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.