இந்தியா முழுவதும் 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 23ஆம் தேதி நிறைவுற்றது. அதனைத்தொடர்ந்து மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதனையடுத்து மக்களவைக் குழுத் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மோடி வருகின்ற 30ஆம் தேதி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதிவியேற்க உள்ளார்.
மேலும், 17ஆவது மக்களவைத் தேர்தலில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல்போல் அல்லாமல் இந்த முறை பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் நடிகைகள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இளம் வயது பெண்கள் என 76 பெண்கள் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் 25 வயதே ஆன சந்திராணி முர்மு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கியோஞ்சர் பகுதியைச் சேர்ந்த இவர் உயிரி தொழில்நுட்பம் (பி.டெக்.) பட்டதாரி படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார்.