மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பம் மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு சிபிஐ (எம்) ஆர்வலர்கள் மூன்று பேர் படுகொலைசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் பாஜக தலைவர் முகுல் ராய் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முன்பிணை வேண்டி மனு அளித்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி, சுவ்ரா கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நிபந்தனையின்பேரில் அவருக்கு முன்பிணை வழங்கினர். அதில், நீதிமன்ற மறுஉத்தரவு வரும்வரை மாவட்டத்தின் லாபூர், போல்பூர், சாந்திநிகேதன் காவல் நிலைய பகுதிகளுக்குள் நுழையக் கூடாது.
இது வழக்கமான முன்பிணை என்பதால், அடுத்த நான்கு வாரங்களுக்குள் விசாரணை நீதிமன்றத்தில் முகுல் ராய் சரணடைய வேண்டும். தலா ரூ.50,000 இரண்டு பிணைதாரர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
முகுல் ராயின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையில் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தாக்கல்செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.இல் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மூன்று சிபிஐ (எம்) ஆர்வலர்கள் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில், இறந்தவரின் உறவினர்கள் அளித்த மனு தொடர்பாக மேலதிக விசாரணைக்கு உயர் நீதிமன்றம் கடந்தாண்டு (2019) செப்டம்பரில் உத்தரவிட்டது.