அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலக பெரும் பணக்காரரர்களில் முதல்வருமான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுடன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார்.
முன்னணி தொழிலதிபரான பில்கேட்ஸ் நடத்திவரும் கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஃபவுண்டேஷன் அமைப்பு, இந்தியாவுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செயல்பட்டு வருகிறது. அதை நேரில் ஆய்வு செய்ய தனது மனைவியுடன் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பில்கேட்ஸ் இந்தியாவிற்கு வருகை தந்தார். அதன் முதல்கட்டமாக, அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து பீகார் சென்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை சந்தித்துப் பேசினார்.
அம்மாநிலத்தின் அடுத்த மூன்று ஆண்டிற்கான சுகாதாரம், வேளாண்மை, பின் தங்கிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நிதித் தேவைகள் குறித்த வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், மாநில அரசின் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அப்பணிகளில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஃபவுண்டேஷன் இணைந்து பணியாற்றவுள்ளதால், அதற்கான திட்ட வரைவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வளர்ச்சிப் பணிகள் குறித்த பேச்சுவார்த்தையில் பில்கேட்ஸ் பங்கேற்றார்.