கரோனா வார்டிலிருந்து தப்பிய பைக் திருடன் : தீவிரமாக தேடும் போலீஸ் - கரோனா வார்டில் இருந்து தப்பிய திருடன்
புதுச்சேரி: பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் கரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடியுள்ளார்.
புதுச்சேரி முதலியார்பேட்டை காவல் துறையினர் நேற்று (ஜூன் 20) காலை மரப்பாலம் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பைக் ஒன்றில் இளைஞர் ஒருவர் வேகமாக வந்துள்ளார். அவரை நிறுத்தி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில் அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். பின் காவல் துறையினர் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில், இளைஞரின் பெயர் ரமணா என்பதும் இவர் அறியங்குப்பம் ராம்சிங் நகர் மாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அதையடுத்து அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆவணங்களை கேட்டபோது சரியான பதில் அளிக்காததால் அவர் ஓட்டி வந்த இருசக்கர மோட்டார் சைக்கிள் வாகனம் திருடப்பட்டது என்றும் தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் இதேபோன்று ஊரடங்கின் நேரத்தில் கிராமங்களில் இருசக்கர வாகனம் திருடியது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து ரமணா திருடிய மோட்டார் சைக்கிளை மீட்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ரமணாவை கைது செய்த காவல் துறையினர் கரோனா பரிசோதனை செய்வதற்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்
இந்த நிலையில் கரோனா பரிசோதனை வார்டில் இருந்த ரமணா நேற்று (ஜூன் 20) மாலை அங்கிருந்து தப்பினார். அவரை முதலியார்பேட்டை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.