தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2019, 11:59 AM IST

ETV Bharat / bharat

49பேர் மீதான தேசதுரோக வழக்கு ரத்து - பிகார் காவல் துறை

பாட்னா: 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்கை ரத்து செய்வதாக பிகார் காவல் துறை தெரிவித்துள்ளது.

49பேர் மீதான தேசதுரோக வழக்கு ரத்து

நாடு முழுவதும் சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் மீதான கும்பல் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இயக்குநர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், ஷியாம் பெனேகல், ராமச்சந்திர குஹா, அபர்னா சென், சௌமித்ரா சாட்டர்ஜி உள்ளிட்ட 49 பிரபலங்கள், கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினர்.

இதனையடுத்து, திரைப்பிரபலங்கள் தாங்கள் எழுதிய கடிதத்தின் மூலம், நாட்டின் பிம்பத்துக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும், பிரதமரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிட்டதாகவும் குற்றஞ்சாட்டி பிகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிகார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி, இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேச துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிகார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக அறிவிக்கப்பட்டது.

"வரலாற்று ஆய்வாளர் ராம் குகன், இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி போன்ற சமூக அக்கறை உள்ள கலைஞர்களை தேச துரோகிகள் என்று சொல்வதைவிடப் பேரபாயம் வேறு எதுவும் இல்லை! சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், ஜனநாயகத்தின் முன்பு படுதோல்வி அடைந்ததுதான் இதுவரை வரலாறு" என தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசதுரோக வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று பிகார் காவல் துறை அறிவித்துள்ளது. புகார் அளித்த நபர் தவறான தகவல்களைக் கொடுத்ததால்தான் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்ததாக பிகார் காவல் துறை விளக்கமளித்துள்ளது.

புகாருக்கு உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய புகார்தாரர் தவறிவிட்டார் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொய் புகார் அளித்தவர் மீது புகார் அளித்த நபருக்கு எதிராக 182ஆவது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிகார் மாநில காவல் துறை தகவல் அளித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details