பாட்னா: பிகார் சட்டப்பேரவை தேர்தல் (2020) மூன்று கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு வருகிற 28ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது குற்றப் பிண்ணனி கொண்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 1064 வேட்பாளர்களில் 328 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை (ஆர்.ஜே.டி) சேர்ந்தவர்கள்.
இதற்கு அடுத்த இடத்தில் பாஜக உள்ளது. பெருங்குற்ற வழக்குகளில் சிக்கி பிணையில் வெளிவரமுடியாத வழக்கு பின்னணி கொண்டவர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் (73%), பாஜகவில் 72% சதவீதத்தினரும் உள்ளனர்.
முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் 41 பேரில் 22 பேர் பிணையில் வெளியே வர முடியாத குற்றங்கள், 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் பட்டியலில் வருகின்றனர்.
அடுத்த இடத்தில் பாஜகவின் 13 வேட்பாளர்கள் உள்ளனர். லோக் ஜன சக்தி கட்சியில் 41 வேட்பாளர்களில் 20 பேர் குற்றப் பிண்ணனி கொண்டவர்கள். காங்கிரஸின் 21 வேட்பாளர்களில் 9 பேர் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 244 பேர் இந்தப் பட்டியலில் வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
மொத்த வேட்பாளர்களில் 29 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் மூவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்குகள் உள்ளன. மொத்தமுள்ள 1064 வேட்பாளர்களில் 375 (35 விழுக்காடு) பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். ஒவ்வொரு வேட்பாளரின் சராசரி வருமானம் ரூ.1.99 கோடியாக உள்ளது. 9 விழுக்காட்டினர் ரூ.5 கோடிக்கு அதிகமாகவும், 12 சதவீதத்தினர் ரூ.2 முதல் ரூ.5 கோடி வருமானம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.