பிகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பாஜக தலைமையிலான கூட்டணியில் மீண்டும் இணையவுள்ளார். 2014ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் விலகினார்.
இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி, முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். 2015ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக மாஞ்சி கட்சியிலிருந்து விலகி இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா என்ற கட்சியை தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், பாஜக கூட்டணியில் நிதிஷ்குமார் இணைந்த காரணத்தால், அந்த கூட்டணியிலிருந்து மாஞ்சி விலக முடிவு செய்தார்.