பிகாரில் ஆசிய யானை மறுவாழ்வு மற்றும் வனவிலங்கு அறக்கட்டளை (AERAWAT) உள்ளது. இங்கு தலைமை மேலாளராகப் பணிபுரிபவர், அக்தர் இமாம். குடும்பத்தில் ஏற்பட்ட சில தகராறுகள் காரணமாக, இமாமின் மனைவியும் மகன்களும் கடந்த 10 ஆண்டுகளாக அவரிடமிருந்து விலகி வாழ்ந்து வருகின்றனர். அக்தர் இமாமும் தனது மையத்திலிருக்கும் யானைகளைப் பெற்ற பிள்ளைகள் போல் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் அக்தரின் அறைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கொலை செய்ய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்துள்ளனர். அப்போது, யானைகள் அடையாளம் தெரியாத நபர்களைப் பார்த்து, பிளிறியதில் இமாம் அக்தர் விழித்துக்கொண்டு, அலாரத்தை ஆன் செய்ததால் கொலையாளிகள் தப்பியோடியுள்ளனர். உயிரைக் காப்பாற்றிய யானைகளுக்கு தனது சொத்தின் பாதியை அக்தர் எழுதி வைத்துள்ளார்.
இதுகுறித்து அக்தர் இமாம் கூறுகையில், 'மோதியும் ராணியும் (யானைகளின் பெயர்) எனது குடும்பத்தில் ஒருவர் ஆவார்கள். இந்த இரண்டு யானைகளும் இல்லாத, எனது வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நான் சொத்தை யானைகள் மீது எழுதிவைப்பதால், எனது குடும்பத்தினரிடமிருந்து கொலை மிரட்டல் வர வாய்ப்புள்ளது. இதற்கு முன்னதாக, எனது மகன் யானைகளைக் கடத்தல்காரர்களுக்கு விற்கவும் முயற்சி செய்தான். ஆனால், நல்வாய்ப்பாக யானைகள் காப்பற்றப்பட்டன. மேலும், தனது சொத்தில், பாதியை மனைவிக்கு எழுதி வைத்துள்ளேன்.
உயிரைக் காப்பாற்றிய யானைகளுக்கும் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தின் பாதியை எழுதி வைத்துள்ளேன். ஒரு வேலை ஜம்போஸ் இறந்தால் பணம் ஏராவாட் (AERAWAT) அமைப்புக்குச் செல்லும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.