மத்தியப் பிரதேச ஜன்சம்வாத் பேரணியில் உரையாற்றிய பாஜக தலைவர் ஜேபி நட்டா, “காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையிலான ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு 2005-2006ஆம் ஆண்டுகளில் சீனா மற்றும் சீனத் தூதரகம் மூன்று லட்சம் அமெரிக்க டாலர்கள் (தற்போதைய இந்திய மதிப்பில் ரூ.2 கோடியே 26 லட்சத்து 56 ஆயிரத்து 450) நிதி உதவி அளித்துள்ளது.
2017ஆம் ஆண்டு டோக்லாமில் சண்டை நடந்தபோது, இந்தியாவுக்கான சீனத் தூதருடன் ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு நடத்தினார். தற்போது கல்வானில் மோதல் நடந்தது. அப்போதும் காங்கிரஸ் நாட்டை தவறாக நடத்த முயற்சித்தது. காங்கிரசுக்கும், சீனாவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது.
ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனா எவ்வளவு நன்கொடை அளித்தது என்பதை இந்த நாட்டு மக்கள் அறிய விரும்புகின்றனர். இது குறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.