பிகாரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்யும் கன மழை காரணமாக மாநிலத்தில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கங்கை நதியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் ஜா, காந்தி காட் பகுதியில் நடைபெற்றுவரும் மீட்பு பணிகளை நேற்று(ஆகஸ்ட் 20) பார்வையிட்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பேருக்கு மோசமாகவே உள்ளது. தற்போது 16 மாவட்டங்களில் கூடுதலாக 8,358 பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம், கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்வதால் மாநில தலைநகருக்கு உடனடியாக எந்தவித அச்சுறுத்தலும் இல்லை" என்றார்.
கங்கை நதி காந்தி காட் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்து 10 செ.மீ உயரத்திலும், பாட்னாவின் ஹதிதாவில் 26 செ.மீ-க்கும் மேலும், பாகல்பூரில் உள்ள கஹல்கானில் 13 செ.மீ-க்கும் அதிகமாக பாய்கிறது.