நாடு முழுவதும் கரோனா வைரஸின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்துவருகிறது.
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப் பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில்கொண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒத்திவைக்கவேண்டும் என பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
தொற்றுநோய்களுக்கு மத்தியில் தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசியத்தை மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியுள்ளது. தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைக்குமாறு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், திட்டமிட்டபடி வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பிகாரில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என தேர்தல் அலுவலக அலுவலர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிகார் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் ஆலோசனைகோரியிருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையம், கரோனா பேரிடர் காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான நெறிமுறைகளை வெளியிட்டது.
அதில், தேர்தலில் மின்னணு முறை பயன்படுத்தப்படுவதால் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும். கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், தேர்தல் நடைபெறும் நாளின் இறுதியில் வாக்களிக்கலாம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக பிரத்யேக நெறிமுறைகள் வெளியிடப்படும்.
வாக்குப்பதிவு நடைபெரும் நாளிற்கு முன்னதாக வாக்குச் சாவடிகளை கட்டாயமாக கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும்.
காய்ச்சல் வெப்பமானிகள் வாக்குச் சாவடியின் முகப்பில் பொருத்தப்படவேண்டும். வாக்காளர்களை வாக்குச்சாவடி அல்லது துணை மருத்துவ ஊழியர்கள் பரிசோதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
சட்டப்பேரவைக் காலம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாவிட்டால், தேர்தல்களை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திடம் அனுமதி கோரும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை இல்லாத நிலையில் மாநிலமானது மத்திய ஆட்சியின் கீழ் வரும் நிலை உருவாகலாம்.