மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரிகான் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பம் தொடர்பாக சமூக ஆா்வலா்கள் கௌதம் நவ்லகா உள்ளிட்ட 11 போ் மீது அம்மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், அந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடா்பாக முன் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் கௌதம் நவ்லகா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அவர் கடந்த மாதம் 14ஆம் தேதி என்ஐஏ அலுவலகத்தில் சரணடைந்தாா்.
இதைத்தொடர்ந்து திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், கரோனா நோய்த் தொற்று பரவும் சூழலைக் கருத்தில் கொண்டும் தனது உடல்நலனை கருத்தில் கொண்டும் இடைக்கால பிணை வழங்க வேண்டுமென டெல்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி அனூப் ஜே.பம்பானி முன் நடைபெற்றது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் நித்யா ராமகிருஷ்ணன், "நவ்லகா தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளதை மும்பை, டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களிடமிருந்து என்ஐஏ மறைத்துள்ளதாகவும் கடந்த 26ஆம் தேதி ரயில் மூலம் டெல்லியிலிருந்து மும்பைக்கு நவ்லகா அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மும்பையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் நவ்லகாவும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றாா்.
மும்பை மற்றும் டெல்லி சிறப்பு நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்து அவசரகதியில் நவ்லாகவை என்ஐஏ அலுவலர்கள் மும்பைக்கு அழைத்துச் சென்றதால் வழக்கின் விசாரணையே பயனற்றதாக மாற்றியுள்ளது என்று நீதிபதி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, நவ்லகாவை மும்பை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவது தொடா்பாக நடைபெற்ற விசாரணையின் விவரத்தை தாக்கல் செய்யக் கோரி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.