சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் நகரத்தைச் சேர்ந்தவர் ஷ்ரத்தா சாஹு. இவர், நெகிழி இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'பாத்திரம் வங்கி' ஒன்றை தொடங்கினார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிக் கவர்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது என சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், சணல் பை, துணிப்பைகளை பயன்படுத்துவோம் என மக்களிடையே உரையாற்றினர். ஆனால், அதற்கு முன்பாகவே ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்க்குமாறும் நெகிழி மாசு குறித்தும் ஷ்ரத்தா விழிப்புணர்வை தொடங்கிவிட்டார்.
ஷ்ரத்தாவின் பாத்திரம் வங்கி எவ்வாறு செயல்படுகிறது?
நிகழ்ச்சிகளுக்கு பாத்திரங்கள் இரவலாக வழங்கப்படுகிறது. பிலாய் நகர மக்கள் மட்டுமின்றி பிற மாவட்ட மக்களும் நிகழ்ச்சிகளுக்கு ஷ்ரத்தாவிடமிருந்து பாத்திரத்தை வாங்கிச் செல்கின்றனர். பாத்திரங்களை வாங்கிச் செல்லும் மக்கள் அவற்றை திருப்பித் தரும்போது கழுவி சுத்தம்செய்து நல்ல நிலையில் ஒப்படைக்கின்றனர்.
நெகிழிப் பயன்பாட்டை குறைக்கும் இல்லத்தரசியின் முயற்சி இது குறித்து ஷ்ரத்தா கூறும்போது, "நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க மக்களுக்கு உதவுவது எனது நோக்கமாகும். அதற்கு முதற்கட்ட நடவடிக்கையாகப் பாத்திரம் வங்கியை தொடங்கியுள்ளேன். நெகிழியால் ஏற்படும் தீமை குறித்து பள்ளி குழந்தைகளுக்கு தெரியப்படுத்தவும் என்னை அழைத்துச் செல்கின்றனர்" என்றார்.
நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தடுப்பது ஒரு சவாலாக மாறி உள்ள நிலையில், இல்லத்தரசியான ஷ்ரத்தாவின் இந்த முயற்சி இளைஞர்களுக்கு உந்துதலாக உள்ளது. இது ஒரு சிறிய முயற்சியாக இருந்தாலும் இந்த நடவடிக்கை நெகிழியில்லாத பசுமையான இந்தியாவை நோக்கிச் செல்வதற்கு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்த ரயில் நிலையம்!