இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகத்தில் நேற்று (ஜூலை11) மாலை வரை ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்து 216ஆக உயர்ந்தது. இதில் 613 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 14,716 பேர் குணமடைந்துள்ளனர்.
குறிப்பாக பெங்களூருவில் ஒரே நாளில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,533 உயர்ந்துள்ளது. மொத்தமாக இதுவரை பெங்களூருவில் 16,862 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டும், 229 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில், “கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைத்த கருத்துகளின் அடிப்படையில், பெங்களூரு நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாவட்டங்களில் ஜூலை 14ஆம் தேதி இரவு 8 மணி முதல் 7 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு பற்றிய விரிவான வழிகாட்டுதல்கள் திங்களன்று வெளியிடப்படும். பால், காய்கறிகள், பழங்கள், மருந்துகள், மளிகை ஆகிய அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது. கரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, வழிமுறைகளை பின்பற்றி முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூருவில் அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் (ஜூலை 12) முடிவடையும் நிலையில், கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க....தங்க கடத்தல் ஸ்வப்னா பெங்களூரில் கைது!