தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் உயிரிழந்த பெற்ற தாயின் உடலை வாங்க 28 மணிநேரம் போராடிய மகன்!

பெங்களூரு : நிலுவைத் தொகை செலுத்தாததால் உயிரிழந்த பெண் நோயாளியின் உடலை கொடுக்க மறுத்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தால், உயிரிழந்தவரின் மகன் 28 மணிநேரம் பரிதவித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனாவால் உயிரிழந்த பெற்ற தாயின் உடலை வாங்க 28 மணிநேரம் போராடிய மகன் !
கரோனாவால் உயிரிழந்த பெற்ற தாயின் உடலை வாங்க 28 மணிநேரம் போராடிய மகன் !

By

Published : Jul 26, 2020, 8:59 AM IST

இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு காரணமாக நாட்டின் பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொருளாதார இழப்பு, வேலைவாய்ப்பு இழப்பு, உயிரிழப்பு என இழப்புகளை மட்டுமே அளித்துவரும் கோவிட்-19 பரவலால் கொடூரத்தின் உச்சத்தை ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, உயிரிழந்த பெண் ஒருவரின் உடலை வாங்க நிலுவைத் தொகையை செலுத்த வழியின்றி 28 மணி நேரத்திற்கும் மேலாக தனியார் மருத்துவமனை ஒன்றில் கையறுநிலையில் நின்ற குடும்பத்தின் சூழ்நிலை காண்போரை கண்கலங்க செய்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமுள்ள பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்னை காரணமாக அவதியுற்று வந்துள்ளார். அவரது சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, கடந்த ஜூலை 13ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைப் பெற்றுவந்த அவர் நேற்று (ஜூலை 25) உடல் நிலை மோசமாகி உயிரிழந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவரின் சிகிச்சை செலவான ரூ. 9 லட்சத்தை செலுத்தக்கூறி தனியார் மருத்துவமனை நிர்வாக அழுத்தம் தந்துள்ளது. இல்லையென்றால் உயிரிழந்தவரின் உடலை அளிக்க முடியாதென தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனையின் மனிதாபிமானமற்ற இந்த அடாவடித்தனத்தால் அவரது குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்வதென தெரியாமல் கையறு நிலையில் 28 மணிநேரமாக தவித்து வந்துள்ளனர். இது தொடர்பாக உயிரிழந்தவரின் மகன் கூறுகையில், "என் அம்மாவின் உடலை பார்ப்பதற்காக நாங்கள் மணிப்பால் மருத்துவமனையில் 28 மணி நேரம் காத்திருந்தோம். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் உடலை எங்களிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர்.

நிலுவைத் தொகையை செலுத்தாமல் உடலை ஒப்படைக்க மாட்டோமென திட்டவட்டமாகத் தெரிவித்தனர். எதிர்ப்பாராத விதமாக, கர்நாடக அமைச்சர் பைரதி பசவ்ராஜ் மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய வந்தபோது, ​​நாங்கள் அவரிடம் எங்களுக்கு உதவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். பின்னர், மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் எங்கள் அம்மாவின் உடலை உடனடியாக ஒப்படைக்க வேண்டுமென அமைச்சர் உத்தரவிட்டார்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details