வாக்காளர் அட்டைகளில் பெயர், விலாசம், பிறந்த தேதி ஆகியவற்றில் எழுத்துப்பிழைகள் வருவது சாதாரணம் தான். அவ்வாறு பிழை இருந்து திருத்துவதற்கு விண்ணப்பித்தால் தேர்தல் ஆணையம் அதனை திருத்தி வேறு புதிய அட்டையை வழங்குவார்கள். அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த சுனில் கர்மகர் (Sunil Karmakar), தனது வாக்காளர் அட்டையில் பிறந்த தேதி தவறாக உள்ளது என்று திருத்துவதற்கு தேர்தல் அலுவலர்களிடம் விண்ணப்பித்துள்ளார்.
சரிசெய்யப்பட்ட புதிய வாக்காளர் அட்டையை பெறுவதற்காக சென்ற சுனில், வாக்காளர் அட்டையில் நாய் புகைப்படம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்," எனது வாக்காளர் அட்டையில் அச்சிடப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால், அங்குள்ள அலுவலர் அதுகுறித்து சிறிதும் பொறுப்பில்லாமல் கையெழுத்திட்டு அதனை அப்படியே என்னிடம் கொடுத்து விட்டார். அரசு அலுவலர் மிகவும் கவனக்குறைவான செயலில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (BDO) புகார் அளிக்க உள்ளேன்" என்றார்.