கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களிலிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர். முதலில் அவர்களைச் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப அனுமதி தர மறுத்த மத்திய அரசு, பின் அதற்கு அனுமதியளித்தது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சிறப்பு ரயில்களுக்கான கட்டணங்களில் 85 விழுக்காட்டை மத்திய அரசும் 15 விழுக்காட்டை மாநில அரசு ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மொத்த ரயில் கட்டணத்தையும் மாநில அரசே ஏற்கும் என்று ட்வீட் செய்துள்ளார். இது குறித்து மேற்கு வங்க அரசின் மாநில செயலர் ராஜீவா சின்ஹா ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதாவ்க்கு எழுதிய கடிதத்தையும் பதிவிட்டுள்ளார்.