கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் ஐந்தாவது முறையாக நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராட மத்திய அரசு ஒரு தெளிவான திட்டத்தை வகுக்க வேண்டும். ஒருபுறம் மத்திய அரசு ஊரடங்கை முழுமையாகவும் கண்டிப்புடனும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஆனால் மறுபுறம் எல்லைகளைத் திறப்பது, ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறது. மத்திய அரசின் அறிவிப்புகள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.