தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இருமுறை கைவிடப்பட்ட தரையிறங்கும் முயற்சி... 3ஆவது முறை நிகழ்ந்த பெரும் விபத்து! - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

டெல்லி: கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் இருமுறை தரையிறங்க முயன்றும் பலத்தக் காற்று காரணமாக தரையிறங்கும் முயற்சி கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக தரையிறங்கும்போதுதான் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

Calicut crash, Air India crash
விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம்

By

Published : Aug 8, 2020, 10:50 AM IST

கரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர 'வந்தே பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, துபாயிலிருந்து கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு விபத்துக்குள்ளானது. கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், தரையிறங்கும்போது ஓடுபாதையில் வழுக்கியதால் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோழிக்கோடு விமான நிலையத்தில் முதலில் இரண்டு முறை தரையிறங்க முயன்றும் பலத்தக் காற்று காரணமாக, தரையிறங்கும் முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் ஓடுபாதையின் எதிர்பக்கத்தில் வந்து விமானி தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நொறுங்கிக் கிடக்கும் விமானம்

விமானம் தரையிறங்க முயன்றபோது கோழிக்கோடு விமான நிலையத்தில் பலத்த மழை பெய்துள்ளது. தரையிறங்கும்போது விமானம் முழு வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது; விமானம் ஓடுதளத்தைத் தாண்டி சென்று, பள்ளத்தாக்கில் விழுந்து இரு பாகங்களாக உடைந்து விபத்திற்குள்ளாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "184 பயணிகள், ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 190 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்தவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விபத்திற்குள்ளான விமானம்

நேற்றிரவு சுமார் 7.40 மணிக்கு நடந்த இந்த விபத்தில், இதுவரை இரண்டு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் நடைபெற்றவந்த மீட்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இதையும் படிங்க: கேரளா ஏர் இந்தியா விமான விபத்து - மீட்புப் பணிகள் நிறைவு

ABOUT THE AUTHOR

...view details