தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிந்து சமவெளி மூதாதையர்கள் உண்ட மாட்டுக்கறி:  மண்பாண்ட பொருள்களில் காணப்பட்ட ஊண் கொழுப்பு! - ஹரப்பா

டெல்லி : சிந்து சமவெளி நாகரிகத்தின் தொன்மை மிக்க ஹரப்பா நிலத்தில் வாழ்ந்த பண்டைய மக்கள் வேத நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் என சொல்லபட்டு வந்த கூற்றை மாட்டுக் “கொழுப்பு எச்சங்கள்” மாற்றி அமைத்துள்ளன.

Beef eaten by Indus Valley ancestors: Dietary fat found in pottery
மூதாதையர்கள் உண்ட மாட்டுக்கறி : சிந்து சமவெளி மண்பாண்ட பொருள்களில் காணப்பட்ட ஊண் கொழுப்பு!

By

Published : Dec 10, 2020, 11:10 PM IST

இந்திய துணைக் கண்டத்தின் தொல்குடிகளான சிந்து சமவெளி நாகரிகத்தோடு தொடர்புடைய ஹரப்பா நிலப் பகுதியான இன்றைய அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் குடியேற்றப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழவாய்வில் பல்வேறு சுடுமண் ஓடுகள், எழுத்தாணிகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், மட்பாண்ட ஓடுகள், எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

ஏறத்தாழ 4,600 ஆண்டுகள் பழமையான தொல் எச்சங்களான அவற்றை இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்குலக நாடுகளைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்விற்கு உட்படுத்தினர். இந்த பகுப்பாய்வானது, இதுவரையிலும் சொல்லப்பட்டு வந்த இந்திய துணைக் கண்டத்தின் ஒட்டு மொத்த வரலாற்றையும் மாற்றி எழுதும் வகையில் அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.

இதுவரை வந்த ஆய்வறிக்கைகளில், குறிப்பிட்ட தொல்லியல் அமைவிடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் மூலமாக அங்கு வாழ்ந்த தொல்குடிகளின் வாழ்விட அமைப்பு, நாகரிகம், பழக்க வழக்கங்கள், இறை குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தற்போது 'ஜர்னல் ஆஃப் ஆர்கியாலஜி சயின்ஸ்' இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில் சிந்து சமவெளி நாகரிக மக்களின் உணவு பற்றிய புதிய தகவல், இந்திய வரலாறு குறித்த மாற்றுக் கருத்தை முன்வைக்கிறது.

சிந்து சமவெளி நாகரிக மக்களிடையே மாடு மற்றும் பன்றி இறைச்சி உண்ணும் பழக்கம் இருந்துள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழுப்பு எச்சங்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த ஆய்வுக் கட்டுரையானது, 4,600 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சிந்து சமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய பண்டைய மண்பாண்டங்களில் இருந்த எச்சங்கள் பற்றி ஆராய்ந்து அரிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளது. அம்மக்களின் உணவில் எருமை, செம்மறி ஆடு, கிடாய் போன்ற கால்நடைகள் முக்கிய இடம் வகித்துள்ளன என்றும், அவர்களின் விருப்ப உணவாக மாடு, பன்றி இறைச்சிகளும் இருந்துள்ளன என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியரும், சி.என்.ஆர்.எஸ் ஃபிரான்ஸ் பல்கலைக்கழகத்தின் (தொல்பொருள் துறை) முதுமுனைவருமான அக்சத்தா சூர்யநாராயண் கூறுகையில், “ குறிப்பிட்ட அந்த மண்பாண்டங்களில் படிந்திருந்த உயிரி எச்சங்களைப் பற்றிய எங்கள் ஆய்வில், அசைபோடாத விலங்கான பன்றி மற்றும் அசைபோடும் விலங்கினங்களான மாடுகள், செம்மறி ஆடுகளின் இறைச்சியும், பால் பொருள்களின் கொழுப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 50 முதல் 60 விழுக்காடு எலும்புகள் மாட்டின் எலும்புகள் என்பதும் ஆய்வில் உறுதியாகியிருக்கிறது” என்றார்.

இந்த கொழுப்பு எச்சங்கள் ஆய்வின் மூத்த ஆசிரியர் கேமரூன் பெட்ரி கூறுகையில், “வடமேற்கு இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் தளங்களில் உள்ள மண்பாண்ட பொருள்களில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் கி.மு 2600 / 2500-1900 ஒத்தவையாக உள்ளன. நகர்ப்புற (பிந்தைய ஹரப்பா) மற்றும் கிராமப்புற குடியிருப்புகள் (முந்தைய ஹரப்பா) தனித்துவமானவையாக இருந்தபோதிலும், அவற்றில் வாழும் மக்கள் பல்வேறு வகையான பொருள்களைப் பயன்படுத்தினாலும், அவர்கள் சமையல் நடைமுறைகள் பெரும்பாலும் ஒற்றுமையைக் கொண்டுள்ளன. உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் வழிமுறைகளை அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கலாம்” என தெரிவித்தார்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் தொன்மை மிக்க ஹரப்பா நிலத்தில் வாழ்ந்த பண்டைய மக்கள் வேத நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் என சொல்லபட்டு வந்த கூற்றை, மாட்டுக் கொழுப்பு எச்சங்கள் திருத்தியுள்ளன.

அதுமட்டுமல்லாது, இந்த முடிவுகள் தெற்காசியாவின் சுற்றுச்சூழல், உணவுப் பொருள்கள், பண்பாடு அசைவுகள் , பண்டைய சமுதாயத்திற்கு இடையிலான உறவைப் புரிந்துகொள்வதற்கான அற்புதமான புதிய வழிகளைத் திறந்துவைத்துள்ளது.

மூதாதையர்கள் உண்ட மாட்டுக்கறி : சிந்து சமவெளி மண்பாண்ட பொருள்களில் காணப்பட்ட ஊண் கொழுப்பு!

முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டில் ஹரியானாவின் ராக்கிகடியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட எலும்புகளின் மரபணு கண்டுபிடிப்புகளின் உட்குறிப்பு, அங்கு வாழ்ந்த மனிதர்களுக்கு தொல் தென்னிந்திய குடிகளோடு (Ancient Ancestral South Indian) நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதையும், தொல்தமிழிய மொழியினத்தோடு மரபை உறுதிப்படுத்தியது இங்கே கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு; முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details