இந்த வார தொடக்கத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் சீன எதிர்ப்பு உணர்வுகள் அதிகமாக உள்ளன.
நான்கு தசாப்தங்களுக்கு பிறகு இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட முதல் மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து, சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்க அழைப்புகள் அதிகரித்துவருகின்றன.
இந்நிலையில், “ஐபிஎல் விளையாட்டுக்கு நிதியளிக்கும் சீன நிறுவனங்கள், இந்திய நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவுகின்றன. சீன தொலைபேசி நிறுவனமான விவோவிடமிருந்து ஆண்டுக்கு ரூ.440 கோடி வருமானம் ஐபிஎல் போட்டிகள் மூலம் கிடைக்கிறது” என்று ஐபிஎல் பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "நீங்கள் உணர்ச்சிவசமாகப் பேசும்போது, உங்கள் பகுத்தறிவை விட்டுவிடுகிறீர்கள். சீன நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் விற்க அனுமதிக்கும்போது, அவர்கள் இந்திய நுகர்வோரிடமிருந்து பணத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் ஒரு பகுதியை பிசிசிஐக்கு விளம்பரமாகச் செலுத்துகிறார்கள்.