கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் - ஆளுநர் ஒப்புதல்
17:22 September 04
தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரச் சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். கரோனா தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கும் வகையில் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகமூடி அணிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வலியுறுத்திவருகிறது. இந்நிலையில் இந்த விதிமுறைகளை மீறுவோரிடமிருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டுவருகிறது.
என்றாலும் விதிமீறல் என்பது குறைந்தபாடில்லை. இதையடுத்து அரசின் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க தமிழ்நாடு அரசு பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவுசெய்தது.
அதன்படி, பொது இடங்கள், பணிசெய்யும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் கரோனா தடுப்பு நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதன்படி நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க தமிழ்நாடு அரசு புதிய அவசரச் சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.