நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும் முற்றிலும் முடங்கின.
இதனால் வேலையிழந்த மக்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்துவருகின்றனர். கடன்களுக்கான மாத தவணையை ஆறு மாதங்கள் நிறுத்தி வைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இருப்பினும் moratorium எனப்படும் இந்த காலத்தில் பொதுமக்கள் கட்ட வேண்டிய கடனுக்கான வட்டிக்கு வட்டியை வங்கிகள் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகிறது.
கஜேந்தர் சர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை அறிவித்தது, தற்காலிகமாக இ.எம்.ஐ. தொகையை நாங்கள் செலுத்த தேவையில்லை என்று நினைத்தோம். ஆனால், அதன் பின்னர்தான் தெரிந்தது இந்த நிறுத்திவைப்பு காலத்தில் கடன்களின் வட்டிகளுக்கு வட்டி கணக்கிடப்படுகிறது என்று. இது மக்களுக்கு மேலும் சுமையை அளிக்கும்.
அவர்கள் வங்கிகளுக்கு நிறைய நிவாரணம் வழங்கியுள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு உண்மையான வகையில் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. ரிசர்வ் வங்கி அறிவித்த ஒரு திட்டத்தை பெறுவதற்காக யாரும் அபராதம் (வட்டிக்கு வட்டி) விதிக்க முடியாது.