ஹைதராபாத்: பர்ரஸ் ஃபிரடெரிக் ஸ்கின்னர் (பி.எஃப். ஸ்கின்னர்) ஒரு அமெரிக்க உளவியலாளர், நடத்தை நிபுணர், எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் சமூக தத்துவவாதியாகவும் அறியப்படுகிறார்.
இவர், 1904ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி பென்சில்வேனியாவின் சுஸ்கெஹன்னா என்ற பகுதியில் பிறந்தார். அவரது தந்தை வழக்குரைஞர், தாயார் இல்லத்தரசி ஆவார்.
இளம் வயதிலே புத்திசாலியாக திகழ்ந்த பிஎஃப் ஸ்கின்னர் நியூயார்க்கில் உள்ள ஹாமில்டன் கல்லூரியில் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். அவர் ஒரு எழுத்தாளராக இருக்க விரும்பினார்.
அதனால், கவிதை மற்றும் சிறுகதைகளை எழுதினார். மேலும் பெற்றோரின் கவனத்தை பெறும்வகையில் ஆய்வகம் ஒன்றையும் உருவாக்கினார். ஆனாலும் அது பெரிய அளவில் கவனம் பெறவில்லை.
எனினும் தொழிலாளர் பிரச்னைகள் குறித்து செய்தித்தாள்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். இந்நிலையில், 1930 ஆம் ஆண்டில் உளவியலில் முதுகலைப் பட்டமும், 1931 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.