எப்படி இந்தியாவின் சாதி எதிர்ப்பு வரலாற்றை அம்பேத்கர் இன்றி எழுத முடியாதோ, எப்படி தமிழகத்தின் திராவிடம் , சமூகநீதி வரலாற்றை தந்தை பெரியார் இன்றி முழுமையாக்க முடியாதோ அப்படிதான் கேரளாவின் சம நீதி மற்றும் தீண்டாமை எதிர்ப்புக்கான போராட்டங்களில் முன்னணியில் நின்ற ஒரு ஆளுமை அய்யன் காளி ஆவார்.
தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத்தந்த கேரளப் போராளி அய்யன்காளி 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் பிறந்தார்.
- நிலம் வைத்துக்கொள்ள தடை
- பெண்கள் மேலாடை உடுத்திக்கொள்ள தடை
- மீசை வைத்துக்கொள்ள தடை
- பொது கிணற்றையும் ,பொது வழிகளையும் பயன்படுத்த தடை
- கோவிலுக்குள் நுழையத் தடை
- கல்விகற்க தடை
- புத்தாடை உடுத்திக் கொள்ள தடை
என கேரள மக்கள் எதிர்கொண்ட ஒடுக்கு முறையின் பட்டியல் மிக நீளம். அத்த இழிநிலையை மாற்றி மக்களை மீட்க பிறந்த ஒளிதான் அய்யன்காளி.
கேரளாவில் நம்பூதிரி எனப்படும் உயர் வகுப்பை சேர்ந்தோர்களின் நிலங்களில் மாடுகளுக்குப் பதிலாக புலையர் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களை கட்டி நிலத்தை உழும் கொடிய பழக்கம் நடைமுறையில் இருந்தது. இதை எதிர்த்து தனது முதல் புரட்சிக் கொடியைத் தூக்கினார் அய்யன் காளி .
"எமது உரிமைகளை நசுக்கி , ஒரு மாட்டை விட கேவலமாக நடத்தும் உமது வயல்களின் சேற்றில் கால் நனைக்க மாட்டோம்" என மக்களை உரிமை முழக்கம் இடச்செய்து மிகப்பெரிய புரட்சி பாதையின் வரலாற்றை உருவாக்கியவர் அய்யன் காளி .
சமூகப் போராளி அய்யன் காளி தாழ்த்தப்பட்டோர் பொது தெருக்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது , ஒருவேலை நடந்தால் நாயர் வகுப்பினரிடமிருந்து , ஈழவர்கள் பதினாறு அடி துாரமும், புலையர் 32 அடி துாரமும் விலகி நிற்க வேண்டும் என்ற கொடுமை நிலவியது. அதேபோல் ஈழவரிடமிருந்து புலையர் ஆறடி துாரமாவது தள்ளி நிற்க வேண்டும் என்று விதிகள் இருந்தன. அவற்றை எதிர்த்து முதலில் கிளர்ச்சி செய்ய முடிவு செய்தார் , அய்யன்காளி.
முதலில் தெருக்களின் வழியாக மாடுகளை பூட்டிக்கொண்டு மணியோசை எழுப்பியவாறு சென்றார் பின்னர் ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து தெருக்களின் நடந்து சென்றார். கேரளாவின் உயர்சாதி வகுப்பினர் அவரை கடுமையாகத் தாக்கி , விமர்சனம் செய்தனர். இச்சம்பவம் நடந்த சாலியர் தெருவே போர்க்களமாக மாறியது, அப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவே போராடினார் அய்யன் காளி.
இவரது தலைமையில் கேரள மாநிலத்தில் முதல் முறையாக நடந்த விவசாயத் தொழிலாளர்கள் போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு
- ஞாயிற்றுக்கிழமை ஓய்வளிக்க வேண்டும் ,
- தொழிலாளர்கள் மேல் பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும்,
- தொழிலாளர்களை அடிப்பதை நிறுத்த வேண்டும்,
- தொழிலாளர்கள் எல்லா இடத்திலும் நடமாட அனுமதிக்க வேண்டும்,
- தொழிலாளிகளின் குழந்தைகளை கல்வி நிலையங்களில் அனுமதிக்க வேண்டும்,
- தொழிலாளர்களை மனம்போனபோக்கில் பலிகடா ஆக்குவதை நிறுத்தவேண்டும்,
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு , அப்போராட்டத்தில் வெற்றியும் கண்டார் அய்யன்காளி.
1904இல் பட்டியல் வகுப்பு மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட தருணத்தில், தனது விடாமுயற்சியினால் தீவிரப் போராட்டத்திற்கு பிறகு சாதி பேதமின்றி எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும் தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளியை தொடங்கி வைத்தார் அய்யன்காளி . மேலும் அந்த பள்ளியை எரிக்க வருகிறவர்களை எதிர்க்க சிலம்பப் பயிற்சி தெரிந்த படையொன்றைக் காவலுக்கு நிறுத்தி வைத்தார் .
அதோடு இல்லாமல் ஒடுக்கப்பட இன பெண்களுக்கு தோள் சீலை அணியும் உரிமையையும் போராடி பெற்றுத்தந்தார். தன்வாழ்நாள் முழுக்க மக்கள் போராட்டம், ஒடுக்கபட்ட மக்களின் விடுதலைக்காகவே அர்ப்பணித்தார் அய்யன் காளி. இந்த மண்ணில் வாழ்ந்தோர் எல்லாம் வரலாறு ஆகுவதில்லை. மக்களின் மனதில் வாழ்போரின் பெயர்கள் மட்டுமே வரலாறு கூறும் .
எனினும் திட்டமிட்டே சிலர் மக்கள் போராளிகளின் வரலாற்றை மறைக்க முற்படுகின்றனர். அப்படி முற்பட்டாலும்,
''வரலாற்று பக்கங்களிலிருந்து யாரை மறைத்தார்களோ, அவர்களே இந்நாட்டின் வரலாற்றை மீண்டும் எழுதுவார்கள்.''