உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய்த்தொற்றுக்கான மருந்து இதுநாள்வரை கண்டுபிடிக்கப்படாத நிலையே தொடர்ந்து நீடித்துவருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்' ஒன்றை ஜூன் 23ஆம் தேதி வெளியிட்டு, அதன்மூலம் கோவிட் -19 நோயாளியை ஏழு நாள்களில் 100 விழுக்காடு உத்தரவாதத்துடன் குணப்படுத்த முடியும் என அறிவித்துள்ளது.
இது குறித்து பதஞ்சலியின் நிறுவனம் வெளியிட்டிருந்த விளம்பரத்தில், "கரோனில் மற்றும் ஸ்வாசரி (Coronil & Swasari) என்ற எங்களது ஆயுர்வேத மருந்தானது, பதஞ்சலி ஆராய்ச்சி மையம்-ஜெய்ப்பூரின் நிம்ஸ் (NIMS) பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, அகமதாபாத் நகரங்களில் இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த மருந்தை 280 நோயாளிகளுக்கு கொடுத்தோம். அனைவரும், 100 விழுக்காடு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்கள்” எனத் தெரிவித்திருந்தது.
யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இவ்வாறு விளம்படுத்திய சில மணி நேரங்களில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் இந்த விளம்பரத்தைத் தடைசெய்ய உத்தரவிட்டது.