ஊரடங்கில் சில தளர்வுகளை அமல்படுத்தியதைத்தொடர்ந்து இந்தியாவில் வரும் திங்கள் கிழமை (மே 25ஆம் தேதி) முதல் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவையைத் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், விமானங்களின் கட்டணங்கள் குறித்துப் பேசிய மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, 'உள்நாட்டு விமான சேவைக் கட்டணங்களை கட்டுக்குள் வைப்பதற்காக மத்திய அரசு ஏழு விதமான கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. அதிகபட்சக் கட்டணம், குறைந்தபட்சக் கட்டணம் என இரண்டையும் வரையறுத்து கட்டணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பெரு நகரங்கள், பெரு நகரங்கள் அல்லாத பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டுமே இயங்கப்படும். மொத்தமாக ஒரு வாரத்திற்கு 100 விமானங்களுக்கு மேல் செயல்பாட்டில் இருக்கும். விமானக் கட்டணங்கள் மிகவும் அதிகரிக்கக்கூடாது என்பதற்காகவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து மும்பை செல்லும் விமானங்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.3,500 முதல் அதிகபட்சமாக ரூ.10,000 வரை விமானக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.