சென்னை மாநகராட்சி முழுவதும் தானியங்கி தெருவிளக்குகள் விரைவில் நிறுவப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறுகையில், "தானியங்கி தெரு விளக்குகளை மாநகராட்சியின் தலைமையகத்திலிருந்தே கட்டுப்படுத்த ஏதுவாக விளக்கின் தூண்களில் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்படும்.
மின்சார ஏற்ற இறக்கங்களை தானாகவே சரி செய்துகொள்ளும் வசதியும், விளக்குகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் பொறியாளருக்கு தானாக எச்சரிக்கை அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இத்திட்டம் தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகர்கள் கூறுகையில், "முற்றிலும் இந்திய தயாரிப்பு பொருள்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் இந்த தானியங்கி தெரு விளக்குகளை நிறுவும் பணி விரைவாக நடைபெற்றுவருகிறது.
இதனால், ஊழியர்கள் மூலம் விளக்குகளை ஆன், ஆஃப் செய்யும் வேலைகள் இனிமேல் இருக்காது. குறிப்பாக, இந்த தெருவிளக்கு நேரக் கட்டுப்பாடுகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது. இரவில் எரியத் தொடங்கும் இந்த விளக்குகள், காலையில் தானாகவே ஆஃப் ஆகிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.