கரோனா வைரஸ் பாதிப்பால் பணக்கார முதலாளி முதல் கூலி வேலை செய்யும் தொழிலாளி வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் வர்த்தக உலகம் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியதால் வரலாறு காணாத அளவில், இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்துள்ளது.
நிலைமையை சரிசெய்ய மத்திய அரசு பொருளாதாரத்தைத் தூண்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' என்ற திட்டத்தை தொடங்கியது.
இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை 2019-20 நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடாகும். 'என்னது இவ்வளவு பெரிய தொகையா' என உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்த 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், பல அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து நாட்களாக வெளியிட்டார்.
மாபெரும் தொகையை உள்ளடக்கிய இந்தத் திட்டம் ஜப்பான், அமெரிக்கா, சுவீடன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஒதுக்கியுள்ள நிதிக்கு சமமாக பார்க்கப்படுகிறது.