தமிழ்நாடு

tamil nadu

ஆன்லைன் வகுப்புகள் குறித்து மாணவர்களிடையே என்.சி.இ.ஆர்.டி நடத்திய ஆய்வு!

By

Published : Aug 20, 2020, 8:22 PM IST

டெல்லி : இணைய வழி (ஆன்லைன் வகுப்பு) கற்பித்தல் முறைகள், கற்றல் செயல்பாடு தொடர்பாக தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி) மேற்கொண்ட ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள் குறித்து மாணவர்களிடையே என்.சி.இ.ஆர்.டி நடத்திய ஆய்வு!
ஆன்லைன் வகுப்புகள் குறித்து மாணவர்களிடையே என்.சி.இ.ஆர்.டி நடத்திய ஆய்வு!

உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் (பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்) மார்ச் 16 முதல் மூடப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

இதனால், மாணவர்கள் கல்வி பாதிப்படையக் கூடாதென கருதிய மத்திய, மாநில அரசுகள் கல்வியாண்டுக்கான பாடங்களை இணைய வழியில் கற்பிக்க அனுமதி வழங்கியுள்ளன. கல்வி நிறுவனங்களின் நீண்டகால மூடல் வகுப்பறை கற்பிப்பதில் இருந்து ஆன்லைன் கற்றலுக்கு மாறுவதை கட்டாயப்படுத்தியுள்ளதாக அரசு கூறுகின்றது.

நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பும், ஆதரவு எழுந்துள்ளது. இந்நிலையில், தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. கேந்திரியா வித்யாலயா, நவோதயா வித்யாலா மற்றும் சி.பி.எஸ்.இ ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளர்கள் உட்பட 34,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவு, தற்போது வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு தகவல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. ஆய்வின் முக்கிய முடிவுகள் :-

நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 27 விழுக்காடு மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் அல்லது மடிக்கணினிகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 28 விழுக்காடு மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்ச்சியான மின்வெட்டு சிக்கலை அனுபவிப்பதாகவும், அதனால் கற்பித்தல் கற்றலுக்கு இடையூறு உள்ளது. பயனுள்ள கல்வி நோக்கங்களுக்காக சாதனங்களைப் பயன்படுத்துவதில் மாணவர்கள், ஆசிரியர்கள் இருதரப்பினருக்கும் போதிய அனுபவமோ, அறிவோ இல்லை.

கற்பித்தல்-கற்றலுக்கான ஒரு ஊடகமாக அதிகபட்சமானவர்கள் கைப்பேசிகளையே தேர்ந்தெடுத்துள்ளனர். ஏறத்தாழ 36 விழுக்காடு மாணவர்கள் தங்களிடம் உள்ள பாடநூல்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைத்த பிற புத்தகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் மடிக்கணினிகளை பயன்படுத்துவதையே மிகவும் விரும்பும் (இரண்டாவது) தேர்வாக கொண்டுள்ளனர்.

கற்பித்தல் -கற்றலுக்காக தொலைக்காட்சி மற்றும் வானொலி மிகக் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களாக அறிய முடிகிறது. ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நேரடி தொடர்பு இல்லாதது ஆன்லைன் வகுப்பு நோக்கத்தில் தோல்வியை ஏற்படுத்துவதாக உள்ளது.

காலங்காலமாக பாடப்புத்தகங்களில் இருந்து படிக்கப் பழகிய மாணவர்களுக்கு மின் இணைப்பு சாதனக் கருவிகளைக் கொண்டு படிப்பது மிகவும் கடினமாக உள்ளதாகவும், ஆசிரியர்களுக்கு மின்-பாடநூல்கள், கருவிகள் பற்றாக்குறை உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. கணிதம் போன்ற பாடங்களை ஆன்லைன் ஊடகம் வழியாகக் கற்றுக்கொள்வது கடினமான ஒன்றாக இருப்பதாக மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆசிரியரிடமிருந்து வரும் தொடர்ச்சியான கண்காணிப்பு, பாட உதவிகள் போன்ற அம்சங்கள் ஆன்லைன் கற்பித்தல் முறையில் இல்லை. அதே போல, ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் ஆய்வகத்தில் நடைமுறை சோதனைகளில் மட்டுமே கற்கக்கூடிய அறிவியல் பாடங்களும் மாணவர்களுக்கு அழுத்தம் தருவதாக உள்ளது.

17 விழுக்காடு மாணவர்கள் ஆன்லைன் ஊடகம் மூலம் மொழி பாடங்களை கற்க சிரமம்படுவதாக அடையாளம் ஆய்வில் காணப்பட்டுள்ளது. பல மாணவர்களும், பெற்றோர்களும் ஆன்லைன் பயன்முறையில் உடற்கல்வி வகுப்புகளின் தேவையை உணர்ந்தனர். ஏனெனில் இந்த தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உடல் தகுதி தேவை.

கலைக் கல்வி மன அழுத்தத்தையும் சலிப்பையும் குறைக்க உதவும் என்றும், அதனை வழங்க வேண்டும் என்றும் 10 விழுக்காடு மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். என்.சி.இ.ஆர்.டி இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், கல்வி அமைச்சகம் மாணவர்களின் கற்றல் மேம்பாட்டு வழிகாட்டுதல்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால்," டிஜிட்டல் வளங்கள் இல்லாத குழந்தைகளுக்கு, தங்கள் வீடுகளிலேயே கற்றல் வாய்ப்புகளைப் பெற, ஆசிரியர்கள் அல்லது தன்னார்வலர்களுடன் இணைந்து அரசு பணியாற்றி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது"என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details