சீனாவின் வூகான் பகுதியிலிருந்து பரவிய கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்றுக்கு உலகம் முழுக்க 81 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு லட்சத்து 40 ஆயிரத்து 390 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மலிவான ஸ்டீராய்டு (ஊக்க) மருந்தான டெக்ஸாமெதாசோன் மருந்துகள் கோவிட்-19 நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் உயிர்காக்க உதவும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மருந்து இங்கிலாந்தின் 175 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 11 ஆயிரத்து 500 நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. அப்போது இந்த மருந்தை உட்கொண்டவர்கள் விரைவில் குணமடைந்தது தெரியவந்தது.
இந்த சோதனையில் 2,104 கோவிட்-19 பாதிப்பாளர்களுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்துகள் நாளொன்றுக்கு ஒருமுறை வழங்கப்பட்டது. இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு வாய் வழியாகவோ அல்லது நரம்பு ஊசி மூலமாகவோ கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கோவிட்-19 பாதிப்பாளர்கள் தொடர்ந்து பத்து நாள்கள் கவனிக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களின் உடல்நிலை நான்கு ஆயிரத்து 321 நோயாளிகளுடன் ஒப்பிடப்பட்டது.
இதில் வழக்கமான கவனிப்பை பெற்ற நோயாளிகளின் இறப்பு விகிதம் 41 விழுக்காடு ஆக இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் டெக்ஸாமெதாசோன் மருந்து அளிக்கப்பட்ட கோவிட்-19 பாதிப்பாளர்கள் உயிரிழப்பு குறைந்திருப்பது தெரியவந்தது.
இருப்பினும், சுவாச ஆதரவு தேவையில்லாத நோயாளிகளிடையே டெக்ஸாமெதாசோனால் எந்த நன்மையும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகையில், “ கோவிட்-19 வைரஸின் பிடியிலிருந்து உயிர்வாழ்வதை மேம்படுத்துவதற்கான முதல் மருந்து டெக்ஸாமெதாசோன். இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவு” என்றனர்.
மருத்துவ விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, “இந்த மருந்து மலிவானது. ஒவ்வொருவரின் வீட்டின் அலமாரியில் உள்ளது. இந்த மருந்தை உலகெங்கிலும் உள்ள உயிரைக் காப்பாற்ற உடனடியாகப் பயன்படுத்தலாம்.
டெக்ஸாமெதாசோன் மருந்துகளை விளையாட்டு போட்டிகள் அமைப்பு தடை செய்துள்ளது. இருப்பினும் வீரர்கள் தேவைப்பட்டால் இதனை விளையாட்டுக்கு வெளியே பயன்படுத்திக்கொள்ளலாம்.
பொதுவாக ஸ்டீராய்டு மருந்துகள் பக்க விளைவுகள் நிறைந்தவை. வலி நிவாரணிகளாக பயன்படுபவை. இவைகள் வலியை போக்காது, மாறாக மறைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 'என் மகனை எண்ணி பெருமைப்படுகிறோம்'- எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரரின் தாய் உருக்கம்!